Monday, October 08, 2007

Katrathu Thamizh -- Movie Review

தமிழ் பட ரசிகர்கள் பார்த்து, ரசித்து வெற்றி கொடுக்கும் படங்களின் கதாநாயகர்கள் எப்பொழுதும் நல்லவர்களாக, மிகவும் பாசமுள்ளவர்களாக பல நல்ல குணங்கள் படைத்தவர்களாகவே சித்தரிக்கபடுவர். சில படங்களே இந்த கட்டுக்கோப்பில் இருந்து மாறுபட்டு இருக்கும்.(உதாரணம்: பருத்தி வீரன்). இப்படிப்பட்ட சூழ்நிலையில், "கற்றது தமிழ்" படம் ஒரு மாறுபட்ட முயற்சி என்று கூறலாம். இதில் கதாநாயகன் பல கொலைகள் செய்பவன். மது அருந்துபவன். கஞ்சா அடிப்பவன். அவன் ஒருபொழுதும் தான் செய்த குற்றங்களை நியாயப்படுத்த முயலாதவன். சுருங்கச் சொன்னால், தமிழ் பட கதாநாயகனுக்கான குணாதிசயங்கள் எதுவும் இல்லாதவன்.

சூழ்நிலை காரணமாக, காவல்துறையில் இருந்து தப்பி ஓடும் நிலைமைக்கு தள்ளப்படுகிறான் பிரபாகர் (ஜீவா). விதி அவனை மிக வேகமாக துரத்தி பிடித்து ஒரு கொலை செய்ய வைக்கிறது. ஒரு கொலை மிக விரைவில் இரண்டு கொலைகளாக விதி செய்யும் சதியால் மாறுகிறது. காலங்கள் உருண்டோட, வருடங்கள் முன்னேற, அவன் செய்த கொலைக் கணக்கும் 22 ஆகிறது. ஒரு தொலைக்காட்சி நிருபரை கடத்தி வந்து, தன் பழங்கதை கூற ஆரம்பிக்கிறான் பிரபாகர். அவன் கதை தான் என்ன? அவன் வாழ்க்கை எப்படி இப்படி தடம் புரண்டது என்பதை சொல்வது தான் மீதிக் கதை. பிரபாகரின் சிறு வயது நண்பியாக, இந்நாள் காதலியாக ஆனந்தி (அஞ்சலி). இவர்கள் ஏன் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதும் கதையோட்டத்தில் விளக்கபடுகிறது.

தமிழ்நாட்டில் தமிழும், தமிழில் பட்டம் பெற்றவர்களும் படும் இன்னல்களை சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ராம். ஆம். முயற்சி தான் செய்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். படத்தின் கடைசி 30 நிமிடங்களில், திருவிழாவில் தொலைந்து போன பணக்கார வீட்டு நாய்க்குட்டி போல அங்கும் இங்கும் அலைந்து கதையையும், அது சொல்ல வந்த கருத்தையும் பரிதாபமாக சாக விடுகிறார்.

ஜீவா என்ற நடிகர் படத்தில் தென்படவேயில்லை. பிரபாகர் என்ற அவரது கதாபாத்திரம் தான் படம் முழுவதும் நிரம்பி வழிகிறது என்பது ஜீவாவின் நடிப்பிற்கு ஒரு மிக நல்ல சான்று. காதல், சோகம், கோபம், இயலாமை என எல்லா உணர்ச்சிகளும் மிக இயல்பாய் இவருக்கு வருகிறது. விக்ரம், சூர்யா வரிசையில் ஜீவாவும் நல்ல நடிகராய் வலம் வருவார் என்பது தெள்ள தெளிவு.

ஆனந்தியாய் புதுமுகம் அஞ்சலி. பல படங்கள் நடித்து கைதேர்ந்த நடிகை போல், புதுமுகமா இவர் என்று வியக்கும் வண்ணம் உள்ளது இவருடைய நடிப்பு. கண்களால் பேசி, அழகாய் சிரித்து பல இளைஞர்களின் மனதை இவர் கொள்ளை கொள்ளப் போவது மிக உறுதியாய் தெரிகிறது. தமிழுக்கு ஒரு நல்வரவாய் இவர் அமைவார் என்று எதிர்பார்க்கலாம்.

படத்திற்கு பெருந்தூணாய் யுவனின் பின்னணி இசையும் பாடல்களும். பல இடங்களில் இசை மெருகூட்டி சில இடங்களில் மௌனம் காத்து ஒரு குட்டி கச்சேரி நடத்துகிறார். நா.முத்துகுமாரின் வரிகளில் ஒவ்வொரு பாடலும் ஒரு ருசி. இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் "பறவையே எங்கு" பாடல் மெய்ச்சிலிர்க்க வைக்கிறது. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் ஒன்றோடோன்று போட்டி போட்டு ஜமாய்க்கின்றன. பல இடங்களில் "சபாஷ்" சொல்ல வைக்கின்றன.

இவை அனைத்தும் அருமையாய் இருந்தும், படம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த மறுக்கிறது. கதாநாயகன் பாத்திர படைப்பில் பலர் போன பாதையில் போகாமல் தனித்து நின்ற ராம், 2 மணி 45 நிமிடம் ஒரு படம் ஓட வேண்டும் என்ற போடாத சட்டத்தில் ஏனோ விடாப்பிடியாய் நின்று விட்டார். முப்பது நிமிடம் குறைவாய் படம் இருந்திருந்தால் இன்னும் நிறைவாய் இருந்திருக்குமோ? கண்டிப்பாய் ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.

மதிப்பெண்: 7/10